Home Sitemap Contact Us

  அணிந்துரை




 
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழறிஞர், கலைஞர் அளித்த அணிந்துரை


சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர், டாக்டர் நன்னன்  அவர்கள் "பெரியாரியல்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை அழகிய  நூல் வடிவம் பெற்றிருப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். "நான்  பொருளியல் மாணவனும் அல்லேன்" என்று அடக்கத்துடன் கூறிக்  கொண்டே நன்னன் அவர்கள் ஆற்றியுள்ள உரை, அவரை தலை  சிறந்த பொருளியல்வாதிகளில் ஒருவராக நம்முன் நிறுத்துகிறது  எனில் அது மிகையன்று.
       வீண் விரயத்தால் பொருளாதார அடிப்படையே சீர்  குலைந்துவிடும் எனத் தந்தை பெரியார் அவர்கள் விளக்கி,  வலியுறுத்தியுள்ள கருத்துகளுக்கெல்லாம் சிகரமாக - விரயம்  செய்வதை எவ்வளவு பெரிய குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டப்  பெரியார் அவர்களே கூறியுள்ள வாசகத்தை நினைவூட்டியிருப்பது  நம் நெஞ்சத்தைத் தொடுகிறது.
 
 
 
 
 
       "நான் ஒரு நிமிடம் ஆட்சியில் இருந்தாலும் முதன் முதலாக பொருள் விரயத்தைத் தடுக்கவே தூக்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இப் பொருள் விரயம்தான் இன்றைய இந்தியாவைப் பிடித்துள்ள பெரும் பிணி என்று சொல்வேன்".
 
 
 
 
 
       இவ்வாறு பெரியார் அவர்கள் அழுத்தம் திருத்தமாக விரயம் குறித்துப் பேசுவதற்கு, நண்பர் நன்னன் அவர்கள் வழங்கியுள்ள விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் பெரியாரே இப்போது இருந்தால்கூட வழங்கியிருப்பாரா என ஐயப்பாடு எழுகின்றது. அந்த அளவுக்குப் பெரியாரின் பொருளாதாரக் கொள்கை குறித்து நன்னன் அவர்கள் விரிவுரையாற்றியிருக்கிறார்.
 
 
 
 
 
      "பொருளாதாரத் தன்மையில் முதலாளி தொழிலாளி என்ற தொடர்பு குரங்காட்டிக்கும் குரங்குக்கும் உள்ள தொடர்பு போன்றதே" என்ற பெரியாரின் கருத்துக்கு டாக்டர் நன்னன் அவர்கள் உரையில் பதவுரையும், பொழிப்புரையும், கருத்துரையும் தந்திடுவதற்கு எடுத்துக் கொண்டுள்ள முயற்சியையும், அதில் அவர் பெற்றுள்ள வெற்றியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 
 
 
 
 
       "பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடமை என்பது சம பங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
 
 
 
 
 
 பெரியார் கொண்டிருந்த இந்தப் பொருளியல்  கொள்கைக்கு நன்னன் விளக்கமளித்திடும்போது, பொதுவுடைமை இருந்து, அதை நுகர்வதற்குத் தேவையான பொதுவுரிமை இல்லாவிட்டால் அது வறிய நிலைதான். அஃதாவது பொதுவுடைமை அற்ற நிலைதான் என்று குறிப்பிட்டிருப்பது மிகப் பெரிய விசயத்தை, எல்லார்க்கும் எளிய முறையில் புரிய வைக்கக்கூடிய திறனைக் கையாண்டுள்ளார் என்றே எண்ணி மகிழ்கின்றேன்.
 
 
 
 
 
       இந்திய நாட்டில் சமத்துவ சமதர்மக் கொள்கைகளை இருள்மண்டிச் சீரழிக்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் இது நூலாக அல்ல; ஒவ்வொருவரின் கைவேலாகவே பயன்படுமென நம்புகிறேன்.
 
 
 
 
 
       எழிலாக நூல் அமைந்திருப்பினும், அச்சுப் பிழைகள் பத்து இடங்களுக்கு மேல் குறு மறுக்களாக இருந்திடல் நன்றோ?
 
 
 
 
 
       அடுத்தடுத்து வரும் பதிப்புகளில் இக் குறை நீக்கப்படும் என எதிர்பார்கிறேன்.
 
 
 
 
 


   அன்புள்ள
மு.கருணாநிதி
  (14.05.1993)
 
 
 
 
 


திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர்
க. அன்பழகன் வழங்கிய அணிந்துரை


       ஆசிரியர் தாம் கண்டறிந்த துளக்கங்களையும் (குறைகள்)   அவற்றைப் புலப்படுத்தும் துலக்கங்களையும் (நிறைகள்) சிறு சிறு   வெளியீடுகளாகக் கொண்டுவந்து அவற்றை நிரல்படத் தொகுத்து,   இந்த விரிவான நூலாகத் தந்துள்ளார்.
       அவற்றைக் குறித்து புலவர் நன்னன் விளக்குகையில், எந்த ஒரு   ஏட்டிலிருந்தும் தாம் எடுத்துக் காட்டியுள்ள அந்தக் குறை தவிர   வேறு குறைகள் எதுவும் இல்லை என்றோ, தான் குறிப்பிடும்   குறைக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றோ, வேறு      விளக்கத்திற்கு இடமில்லை என்றோ தான் கருதவில்லை என்றும்,   தன் எழுத்தும், கருத்தும் பிறர் எடுத்துக்காட்டக்கூடிய அப்படிப்பட்ட

திருத்தங்களுக்கு உரியதே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
 
 
 
 
       தமிழ் உரைநடையில் தமிழுக்கு ஊறு செய்யும் நோய்க் கிருமிகள் குடிபுகுவதற்கு, இன்று நாம் ஏமாந்து இடமளித்துவிட்டால், நாளை தமிழ்மொழி சிதைந்து சீரழிந்து, வடிவிழந்து வாழ்விழக்கும் நிலை வரநேரலாம் என்பதாலேயே இப்பணி இன்றியமையாத கடமை ஆகின்றது என்று ஆசிரியர் கருதுகிறார்.
 
 
 
 
 
       வேற்றுமொழிச் சொற்கள் விரவிவருமாறு கலப்படத் தமிழ் எழுதும் வழக்கம் பெருகுமானால், நற்றமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து மறையும், தமிழ்மொழியின் இன்னோசை இன்பம் குலையும், பழந்தமிழ் இலக்கியச் செல்வம் நமதென்னும் பெருமித உரிமை உணர்வையும் இழப்போம், நாளடைவில் தமிழ்மொழி வழக்கு அழியும்போது, அதைப் பேசுவோர் தமிழர் என்னும் கருத்தழியும் என்பதையெல்லாம் அடுக்கடுக்காக எண்ணியதன் விளைவன்றோ, மும்மொழி வல்லுநர் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்! அதன் பயனன்றோ முத்தமிழின் தனித்தன்மை, மேன்மை, தொன்மை ஆகிய சிறப்புக்கள் முகிலைக் கிழித்து வெளிவரும் முழுமதியென தண்ணொளி பரப்பும் நிலை பிறந்தது.
 
 
 
 
 
       ஆம், மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஒத்ததொரு விழுமிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள பணியின் விளைவுதான் நாம் இந்நூலில் காணும் "துளக்கங்களும் துலக்கங்களும்" எனலாம்.
 
 
 
 
 
     ஒவ்வொருவருக்கும் வாய்த்திடும் பழக்கத்தாலும், வழக்கத்தாலும், தமிழ்ப் பேச்சிலும், எழுத்திலும், தெரிந்தும் தெரியாமலும், மறந்தும் மாற்றியும் வழங்கப்படுவனவற்றால் பிழைகள் பல வளர ஏதுவாகின்றன.
 
 
 
 
 
       ஓர் ஊரில் ஒரு மன்னன் இருந்தான்;
       ஒரு நாட்டில் ஒரு அரசன் ஆண்டான்-
 
 
 
 
 
   இவற்றில் இடம்பெறும் ஒரு; ஓர் இரண்டும் பலராலும் மாற்றி, மாற்றி வழங்கப்படுவதை நாமறிவோம்.
 
 
 
 
 
       புறநகர்ப் பகுதியில் நான் குடியிருக்கிறேன்.
 
 
 
 
 
       நகர்புறப் பகுதி வளர்ந்து வருகிறது.
 
 
 
 
 
       கிராமப் புரத்தில் குடிநீர் வசதி இல்லை.
 
 
 
 
 
       ஆற்றுக்கு அப்புறத்தில் அடர்ந்த காடு உள்ளது.
 
 
 
 
 
என்பன போன்ற தொடர்களில் இடம்பெறும் புரமும்-புறமும் பலரையும் குழம்பச் செய்கின்றன. நாற்புரமும், நாட்டுப் புரமும், ஏரிப்புரம்போக்கும் இடையினம்; புறநகரும், பிறங்கடையும் வல்லினம் என்பது கருத்தில் கொள்வதற்குரியது.
 
 
 
 
 
       பேராசிரியர் நன்னன் அவர்கள், திருக்குறள் ஒன்றேமுக்கால் அடி அளவான குறள் வெண்பாக்களைக்  கொண்டது என்பது சரியல்ல; மூன்று சீர் கொண்ட இரண்டாவது அடியும் இலக்கணப்படி முழு அடியே ஆதலின், திருக்குறள் ஈரடி என்றோ, ஏழே சீர் கொண்டது என்றோ குறிப்பதே பொருந்தும் என்று தரும் விளக்கமும்,
 
 
 
 
 
       ஆங்கில மொழித் தொடர்பால் நாம் வழக்கில் கொண்டுள்ள காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி முதலியவற்றிற்கு ஈடாகத்தான், தொன்னாள் முதலாகத் தமிழில் இடைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதற்குச் சான்றுகளுடன் தரும் விளக்கமும் பலரும் அறிய வேண்டியதாகும்.
 
 
 
 
 
       எனது நீண்டகால நண்பரும் என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவரும்; தமது வாழ்நாளில் பெரும்பகுதி தமிழ்மொழி கற்பித்தல், வளர்த்தல், பிழை திருத்தல், செம்மைப்படுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டவரும், தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கப் பகுத்தறிவுச் சிந்தனையில் ஊறியவரும்; பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின அறிவாற்றலையும், பரந்த நோக்கத்தையும், மனித நேயத்தையும் போற்றுபவரும்; சீர்திருத்தத் திருமணம் மேற்கொண்டு, பகுத்தறிவு நெறி தழுவி வாழ்வாங்கு வாழ்பவருமான முதுபெரும் புலவரும் முனைவருமான பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் ஆழ உழுத அறிவுப் புலத்தில் விளைந்த நன்மணிகள் என்று சிறப்பித்துக் கூறக்கூடிய ஆய்வுத் துணுக்குகளே துளக்கங்களும் துலக்கங்களுமாக தொடுக்கப்பட்டுள்ள இந்த நூலென்பேன்.
 
 
 
 
 
       இந்த நூலில், மக்கள் பேச்சு வழக்கத்தால் வளர்ந்த வழுக்கள் பலவும், பொருளைத் தெளிதலில் ஏற்படும் தடுமாற்றங்கள் பலவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் படிப்பவரின் சிந்தனைக்கு உரியவாதலின் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக்காட்ட நான் விரும்பவில்லை.
 
 
 
 
 
       எனவே, நல்ல உரைநடை எழுதுவது, மொழி காப்புக் கடமையாகும் என்பதால் இந்த நூலை ஓர் அகர முதலி போன்று ஒவ்வொருவரும் பயன்படுத்துவதன் மூலம் நல்ல தமிழ் காக்கவேண்டும் என்பேன்.


 
 
 
 
 
   அன்பன்
க.அன்பழகன்