Home Sitemap Contact Us

  கல்விப்பணி

 

கல்வி


       கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டக் காவனூரே இவர் தம் சொந்த ஊர். தம் தாயின் பிறந்தகமாகிய கிளிமங்கலம் எனும் ஊரில் மூன்றாம் வகுப்பு வரையில் படித்துப் பின் தம் ஊரையடுத்துள்ள திருமுட்டம் என்னும் பேரூரில் எட்டாம் வகுப்பு வரையில் படித்து விட்டு உழவுப் பணியில் சில ஆண்டுகளைக் கழித்தபின் சிதம்பரத்தில் புகுமுக வகுப்புப் படித்துத் தேறி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (1940-1944) புலவர் பட்டம் பெற்றார். பிறகு கல்விப் பணியிலிருந்து கொண்டே மெற்றிகுலேசன், இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ., ஆகியவற்றைப் படித்து முடித்துத் தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவை சென்னை பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டவை, புலவர் பட்டம் மட்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டது. தமிழாசிரியர் பயிற்சிச் சான்றும் சென்னை பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டது.


ஆசிரியர் பணி


      காவனூரில் பின்னர் தோன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக இவர்தம் கல்விப் பணி தொடங்கியது.
 
 
 
 
 
      புலவர் பட்டம் பெற்றபின் இலப்பைக் குடிக்காடு, திருமுட்டம் ஆகிய ஊர்களின் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துவிட்டுக் கோவை, மேட்டூர், வேலூர் ஆகிய ஊர்களிலும் 1949 முதல் சென்னையிலும் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
 
 
 
 
 
      சென்னையில் மதரசே ஆசம்; சைதை ஆசிரியர் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
 
 
 
 
 
      இறுதியாக மாநிலக் கல்லூரியில் 7.9.1972 முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றியபின் 1980-83 ஆகிய மூன்றாண்டுகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணிபுரிந்து 31.5.1983 இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
 
 
 
 
      கல்வித் துறையின் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக் கல்லூரி ஆகிய எல்லாவகைகளிலும் நிலைகளிலும் பணிபுரிந்துள்ளார். இவை தவிர வயது வந்தோர் கல்வி, ஆட்சி மொழிக் கல்வி, பிறமொழியாளர் கல்வி ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார். வயது வந்தோர் கல்விவாரியத் துணைத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.


நன்னன் முறை


       எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் ஒரு புதியமுறையை ஏற்படுத்திக் கொண்டு சென்னையில் உள்ள பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளிலும், தமிழ் இணைய பல்கலைக் கழக வாயிலாகவும், கோலாலம்பூர், இலண்டன் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள தொலைக்காட்சிகளிலும் அது ஒளிபரப்பப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் கற்பித்துள்ளார். அங்கு அறுபதுக்குக் குறையாத குறு நாடகங்களை (உங்களுக்காக என்பது அத்தொடரின் பொதுப்பெயர்) எழுதி இயக்கி, நடித்துமுள்ளார்.
 
 
 
 
 
       நன்னன் முறையை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு நூலே தமிழ் எழுத்தறிவோம் என்பது. இந்நூலை "நன்னன் முறை" எனப்படும் முறைப்படி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் 43 முதல் 62 வரை உள்ள வகுப்புகள் போதுமானவையாகும். அப்படிக் கற்றாலும் கற்பித்தாலும் தமிழில் உள்ள எதையும் படிக்கவும் எழுதவும் திறன் பெற முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் எழுத்துகள் 209. கிரந்த எழுத்துகள் 7. எழுத்துகளை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் 215. பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் 293. சோதனைகள், தேர்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் 101. எனவே இந் நூலில் மொத்தம் 609 சொற்களின் வாயிலாக 216 எழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன.