பொது வாழ்வு
விடுதலை இயக்கம்
தொடக்கக்
காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் நடராசன் என்பவரின் தொடர்பால்
பொதுவுடமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்த மா.நன்னன்,
எம்.என்.ராய் நடத்திய "ராடிகல் டிராமாகிரட்டிக் பார்ட்டி"
கட்சியோடு சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்துவிட்டுப் பேராயக்
கட்சியில் (காங்கிரசில்) சேர்ந்து சில ஆண்டுகள்
பணியாற்றிய போது "வெள்ளையனே வெளியேறு" எனும்
இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடினார். ஆனால் பிடிபட்டுச் சிறைக்குச்
செல்லவில்லை. இவரது அண்ணன் திருநாவுக்கரசைப் பிடித்துச் சென்ற காவலர்
இவர்தம் இளமை கருதி இவரை பிடிக்க மறுத்துவிட்டனர். பிற்காலத்தில்
இந்திப் பெயர் அழிப்புக்காக இவர் தலைமையேற்றுச்
சென்னை நடுவண்தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றபோது (சென்னை
சென்ட்ரல்) பிடிபட்டுச் சிறைக்கும் சென்றுள்ளார்.
கடற்பாறைகள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்றபோது (1942
- 1943) பார்ப்பன மாணவர்கள் இசையரசு எம்.எம்.
தண்டபாணி தேசிகரின் தமிழிசை அரங்கில் குழப்பம் ஏற்படுத்திக்
கலைத்துவிட்டனர். அதனால் தமிழ் உணர்வு வரப்பெற்ற இவர் பேராசிரியர்
அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன்
ஆகியோருடன் தொடர்பு கொண்டு நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம்
ஆகியவற்றின் கொள்கைகளைப் படிப்படியாகவும் அணுஅணுவாகவும் ஆராய்ந்து
ஏற்று, அவர்கள் இராமையா எனும் பெயரை
அன்பழகன் என்றும் நாராயணசாமி எனும் பெயரை
நெடுஞ்சழியன் என்றும் மாற்றிக் கொண்டபோது தாமும்
தம் திருஞானசம்பந்தன் எனும் பெயரை நன்னன்
என்று மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றிக் கொண்ட அனைவரும்
படம் எடுத்துக் கொண்டனர். அப்படத்திற்கு "கடற்பாறைகள்"
எனும் பெயரும் இடப்பட்டது.
அரசியல்
படிப்பு
முடிந்ததும் (1944) பெரியார் கூட்டத்தில் பேச
மயிலாடுதுறையை அடுத்த வடகரை எனும் ஊருக்குச் சென்ற நன்னன்
பெரியாரின் விருப்பதிற் கிணங்க அவரோடு சென்று ஈரோட்டில்
பெரியாரின் இல்லத்திலேயே தங்கிச் சுயமரியாதை இயக்கப்
பணியில் ஈடுபட்டார். பிறகு இவர்தம் விருப்பப்படி பெரியாரின் உதவியால்
தமிழாசிரியப் பணிக்குச் செல்ல நேர்ந்தது.
பெரியாரின் கடும் பத்தியத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமையாலேயே இவர்
அவரை விட்டு விலகாது விலக நேர்ந்தது.
பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் ஆகிய திராவிடத்
தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த இவர் காமராசர்,
மூப்பனார், சீவானந்தம் (சீவா), கலைவாணர், ம.கோ.இரா.
ஆகியோர்களோடும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.
இரு முறை
பொதுத் தேர்தலில் நிற்கத்தக்க சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும் அதில்
தமக்குப் போதிய ஆசை இருந்த போதிலும் இறுதியில் உறுதியாக அதை மறுத்து
விலகியதோடு எப்போதும் நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே இருந்தார்.
தி.மு.க வின் பொதுக்குழு, செயற்குழு, தலைமைச்
செயற்குழு போன்றவற்றுள் சிறப்பு
அழைப்பாளராக இருக்கிறார். தி.மு.க. உறுப்பினராகத் தொடர்ந்து அதன்
தொடக்க காலம் முதல் இருக்கிறார். தமிழ்நாட்டு அரசின் சமூக
சீர்திருத்தக் குழுவின் தலைவராகவும், தி.மு.க நடத்திய
அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வராகவும்,
தி.மு.கவின் தலைமை இலக்கிய அணியின் புரவலராகவும்
செயல்பட்டுள்ளார்.